Page Loader
பெங்களூரு வழக்கறிஞரின் ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு

பெங்களூரு வழக்கறிஞரின் ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு

எழுதியவர் Sindhuja SM
Apr 10, 2024
12:56 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் இருந்து 14 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றி பறித்த ஒரு கும்பல், போதைப்பொருள் சோதனைக்காக அவரது ஆடைகளை கழற்றி அதை வீடியோவிலும் பதிவு செய்திருக்கிறது. அதற்கு பிறகு, அந்தப் பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் மூலம் அந்த கும்பல் அவரிடம் இருந்து கூடுதலாக ரூ.10 லட்சத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மும்பை சைபர் கிரைம் குழுவினர் என்று கூறி அந்த பெண்ணை ஏமாற்றிய ஒரு கும்பல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கேமராக்கள் மற்றும் மைக்குகளை பொருத்தி, அவரை 2 நாட்கள் பிணையகைதியாக வைத்திருந்திருக்கிறது. கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 3) ஃபெடெக்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அந்த பெங்களூரு வழக்கறிஞருக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது.

பெங்களூரு

பெண் வழக்கறிஞரை ஏமாற்றி பணம் பறிப்பு 

அந்த பெண் வழக்கறிஞரின் பெயரில் தாய்லாந்துக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டதாகவும், அந்த பார்சலில் ஐந்து பாஸ்போர்ட்டுகள், மூன்று கிரெடிட் கார்டுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட 140 எக்ஸ்டசி மாத்திரைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்ட அந்த பெண் அது தன்னுடையது அல்ல என்று கூறி இருக்கிறார். உடனே, இந்த சம்பவம் குறித்து மும்பை சைபர் கிரைமிடம் புகார் அளிக்கும் படி அவரிடம் அறிவுறுத்தி இருக்கின்றனர். அதன் பிறகு, மும்பை சைபர் கிரைம் குழுவினர் போல நடித்து அந்த வழக்கறிஞரை ஏமாற்றிய அந்த கும்பல் 14 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றி பறித்தது மட்டுமல்லாமல், போதைப்பொருள் சோதனை என்று கூறி அவரது ஆடைகளை கழற்றி அதை வீடியோவிலும் பதிவு செய்திருக்கிறது.