அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
அதிமுக'வில் ஒற்றை தலைமை காரணமாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இருஅணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் வலுத்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூலை 11ம்தேதி எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, ஓபிஎஸ் தரப்பினர்களும் ஓபிஎஸ்'யும் கட்சியை விட்டு நீக்கினர். இதற்கு எதிர்ப்புதெரிவித்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு இதுகுறித்து மேல்முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று(பிப்.,23)உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ்மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் - நீதிபதிகள்
இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பினை இன்று நீதிபதிகள் அளித்துள்ளார்கள். தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கூறுகையில், கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு குறித்து விசாரித்தோம். எதிர்தரப்பினரது கருத்துக்களும் கேட்கப்பட்டது என்று கூறினர். அதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பினை வழங்கினர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தனர். அதே போல் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும், ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரை கட்சியை விட்டு நீக்கியதும் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.