7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து
கடலூரை சேர்ந்த 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை 20 ஆண்டுகள் சிறைதண்டனையாக உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. கடலூர் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தை சேர்ந்த சிறுவனின் பெயர் சுரேஷ்(7). கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது சுரேஷை சுந்தர்ராஜன் என்பவர் கடத்தினார். அதன் பின், 5 லட்சம் ரூபாய் கேட்டு சுரேஷின் பெற்றோரை சுந்தர்ராஜன் மிரட்டி இருக்கிறார். அவர் கேட்ட பணம் கிடைக்கவில்லை என்றதும் சிறுவன் சுரேஷை கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், சுந்தர்ராஜனை கைது செய்தனர். சுந்தர்ராஜனுக்கு தூக்கு தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
2018ல் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது
இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. 2013ஆம் ஆண்டு, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அப்போது விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட உத்தரவை மீண்டும் உறுதி செய்தது. ஆனால், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று 2018ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் சுந்தர்ராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அப்போது விசாரித்த பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதை இன்று விசாரித்த டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, குற்றவாளி சுந்தர்ராஜனுக்கான தண்டனையை குறைத்து உத்தரவிட்டுள்ளது.