3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம்
தமிழகத்தில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ஒரே ஒரு வகையான சத்துமாவு மட்டுமே மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அதை மாற்றி, இனி 3 வகையான சத்துமாவுகளை தமிழக அரசு வழங்க இருக்கிறது. இந்த புதுவித சத்துமாவுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட இருக்கிறது. கடந்த வருடம், அங்கன்வாடிகளில் இருக்கும் 38 லட்சம் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு நடப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் தமிழகத்தில் உள்ள 9.3 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, 3 விதமான சத்துமாவு பாக்கெட்டுகள் அங்கன்வாடிகளில் வழங்கப்பட இருக்கிறது.
மூன்று விதமான சத்துமாவின் விவரங்கள்
வெள்ளை நிற பாக்கெட்டுகள்- 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கானது. இந்த சத்துமாவு BIS தர சான்றிதழ் பெற்ற மாவாக இருக்கும். இது 2 கிலோ பாக்கெட்டாக வழங்கப்படும். இளஞ்சிவப்பு நிற பாக்கெட்டுகள்- 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கானது. இது 'வெண்ணிலா', 'சாக்லேட்', 'ஸ்டாபெர்ரி' போன்ற பிளேவர்களில் 500 கிராம் பாக்கெட்டுகளாக வழங்கப்படும். நீல நிற பாக்கெட்டுகள்- கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மாவில் இனிப்பின் சதவீதம் குறைக்கப்பட்டு புரத சத்துகளின் சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கும். மேலும், இது 500 கிராம் பாக்கெட்டுகளாக வழங்கப்படும்.