தான் பயின்ற பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்தார் சாலமன் பாப்பையா
தான் பயின்ற மதுரை அரசு பள்ளிக்கு பேராசிரியரும், பேசுச்சாளருமான சாலமன் பாப்பையா ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார். 1941இல் இருந்து 1945 வரை, மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு அருகே உள்ள வெள்ளிவீதியார் மாநகர பள்ளியில் சாலமன் பாப்பையா ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். இந்த பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்டு மகளிர் மேல்நிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்திற்கு கீழ், தான் பயின்ற அரசு பள்ளியில் வகுப்பறை கட்டும் பணிக்காக ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார் பேராசிரியர் சாலமன் பாப்பையா.
'சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும்': எம்பி சு. வெங்கடேசன்
இந்த நிதியை அவர் நேரடியாக மதுரை மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரிடம் வழங்கியுள்ளார். இதற்கு மதுரை மக்களவை எம்பியும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் எம்பி சு. வெங்கடேசன், "தனக்குப் பயன்தந்து இன்பமூட்டிய கல்வியை வழங்கிய வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி இன்னும் பல்லாண்டுகள் நீடித்துநின்று பலருக்கும் கல்விப் பயனை நல்க வேண்டும் என்று விழைந்து அப்பள்ளிக்கு 20 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ள தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும்" என்று தெரிவித்துள்ளார்.