சேலம் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 3 பேர் உடல் சிதறி பலி
சேலம் மாவட்டம் மஜ்ராகொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியினை சேர்ந்தவர் சதீஷ்குமார்(41). இவர் வேறு ஒருவர் பெயரில் சர்க்கார்கொல்லப்பட்டி விவசாய தோட்டப்பகுதியில் பட்டாசுஆலை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். இந்த ஆலையில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் பணிபுரிந்து வந்துள்ளார்கள். இதனிடையே நேற்று(ஜூன்.,1)உரிமையாளர் சதீஷ்குமார் உள்பட 9 பேர் பட்டாசினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மாலை 4 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசு ஆலை வெடித்து சிதறியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து ஆம்புலன்சும், இரும்பாலை காவல்துறையும் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது படுகாயமடைந்து ஆங்காங்கே கிடந்த 6 பேரினை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உரிமையாளர் சதீஷ்(41),நடேசன்(50)மற்றும் பானுமதி(40) ஆகிய 3பேர் வெடிவிபத்தில் உடல் சிதறி இறந்துக்கிடந்தனர்.
தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக அறிவிப்பு
ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் இறந்த பெண்ணின் தலையினை காணவில்லை என்றும் கூறப்பட்டது. பின்னர் 3 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, கமிஷனர்கள் கவுதம் கோயல், லாவண்யா, உதவி கலெக்டர் மாறன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதியாக கொடுத்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.