சபரிமலை கோயில் தங்கம் காணாமல் போன வழக்கு: முன்னாள் நிர்வாக அலுவலர் கைது
செய்தி முன்னோட்டம்
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், துவாரபாலகர்கள் சிலைகளின் தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் நிர்வாக அலுவலர் (Executive Officer) சுதீஷ் குமார் சிறப்புப் புலனாய்வு குழுவால் (SIT) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டில், சபரிமலை சன்னிதானத்தில் இருந்த துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள், செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. அப்போது, 42.8 கிலோவாக இருந்த தங்கக் கவசங்களின் எடை, சீரமைப்புக்குப் பிறகு 38 கிலோவாகக் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 4.54 கிலோ (200 பவுன்) தங்கம் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
கைது
கைது விவரங்கள்
சபரிமலை செயல் அதிகாரியாக சுதீஷ் குமார் இருந்தபோது, இந்த கவசங்களை செப்பனிட இடைத்தரகராக செயல்பட்ட உண்ணிகிருஷ்ணன் போத்தியிடம் ஒப்படைக்கும்போது, அவர் அவற்றை "தங்கக் கவசங்கள்" என்று ஆவணங்களில் குறிப்பிடாமல், "செப்புத் தகடுகள்" என்று தவறாகப் பதிவு செய்துள்ளார். இந்த முறைகேடே தங்கம் மாயமாக வழிவகுத்தது எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் அப்போதைய துணை ஆணையர் முராரி பாபு ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சுதீஷ் குமார் கைது செய்யப்பட்டதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, இந்த மோசடி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.