Page Loader
வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயில்

வரும் ஜனவரி 14ம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் - நடை திறப்பு

எழுதியவர் Nivetha P
Dec 31, 2022
03:17 pm

செய்தி முன்னோட்டம்

சபரிமலையில், அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். 41 நாட்கள் நடக்கும் இந்த மண்டல பூஜை நவம்பர் 17ம் தேதி துவங்கியது. இந்த 41 நாட்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி, சபரிமலையில் தற்போது மண்டல பூஜை முடிந்த நிலையில், அடுத்து மகர விளக்கு பூஜை நடைபெறவுள்ளது. இந்த பூஜையின் பொழுது தடையின்றி மின்சாரம் கிடைக்க மின் விநியோகம் செய்யும் வழித்தடங்களில் பழுது பார்த்தல், சேதமான கருவிகள் ஆகியவற்றை மாற்றுதல் போன்ற பணிகளில் நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜனவரி 20ம் தேதி வரை கோயில் நடை திறந்தே இருக்கும் என அறிவிப்பு

ஜனவரி 14ம் தேதி நடக்கும் மகர ஜோதி காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு

இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறவுள்ளது என்றும், இன்று (30.12.2022) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை திறக்கப்படும் கோயில் நடை வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெறவுள்ள மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்தை தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி வரை கோயில் நடை திறந்தே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகர விளக்கு பூஜை அன்று பொன்னம்பலம்மேட்டில் தெரியும் மகர ஜோதியை காண வழக்கம் போல் இந்தாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தரிசனம் காணவரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.