பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலஸ்தீன பிரதமரிடம் சனிக்கிழமை பேசினார். அந்த தொலைபேசி உரையாடலின் போது இந்தியாவின் 'நீண்ட கால நிலைப்பாட்டை' மீண்டும் அவர் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் "இன்று மாலை[சனிக்கிழமை] பாலஸ்தீனிய பிரதமர் முகமது ஷ்டயேயுடன் பேசினேன்" என்று கூறியுள்ளார். "காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள நிலைமை குறித்து அவர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டேன்" என்று அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைதியான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்
ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது என்று அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு நாளுக்கு பிறகு அவர் பாலஸ்தீன பிரதமரிடம் பேசியுள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் பிரச்னையை தீர்க்க அழைப்பு விடுத்ததோடு, போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்தார். "பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைப் பற்றி நாங்கள் கவலையுற்றுள்ளோம். மேலும் பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் மோதலை அமைதியான முறையில் தீர்க்கவும், போரை கட்டுப்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளோம்," என்று ஒரு நாடாளுமன்றத்தில் எழுந்த ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.