குறையும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி, காரணம் என்ன?
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடியானது 30 அமெரிக்க டாலர்களில் இருந்து, 4 அமெரிக்க டாலர்களாகக் குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு பிற சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை விட 30 டாலர்கள் குறைவான விலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தன இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள். தற்போது அந்த மதிப்பு 4 டாலர்களாகக் குறைந்திருக்கிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய்யை விட குறைவான விலையிலேயே தங்களுடைய உரல் கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு ரஷ்ய நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால், ரஷ்யா துறைமுகங்களில் இருந்து இந்தியாவிற்கு அந்த கச்சா எண்ணெய்யைக் கொண்டு வர பேரலுக்கு 11-19 டாலர்கள் செலவாகிறது.
தள்ளுபடி குறைந்ததற்கான காரணம் என்ன?
இது சாதரண போக்குவரத்துக் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல், தனித் தனியாக ரஷ்ய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றன. அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் மொத்தமாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் பட்சத்தில், இந்திய நிறுவனங்களால் இன்னும் குறைவான விலையிலேயே ரஷ்ய கச்சா எண்ணெய்யையப் பெற முடியும். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்பு வரை, அதாவது பிப்ரவரி 2022 வரை ரஷ்யாவில் இருந்து 2% அளவிற்கு மட்டுமே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது இந்தியா. உக்ரைன் போருக்குப் பிறகு, குறைவான விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா வழங்கத் தொடங்கிய பிறகு அது 44%-ஆக உயர்ந்திருக்கிறது.