தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி
தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த போலீசார் முதலில் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்த அமைப்பின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தை நாடி சென்று முறையிட்டனர். இதனையடுத்து இந்த அமைப்பினர் பேரணி நடத்த நீதிமன்றமும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் பேரில் இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணியினை நடத்த அனுமதி அளித்ததோடு, தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் படி, தற்போது தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று(ஏப்ரல்.,13) அனுமதி அளித்துள்ளனர்.
அனைத்து மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்
இதனையொட்டி வரும் 16ம் தேதி இந்த பேரணியானது நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்துகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் நிலையில் உள்ளார்கள். இம்முறையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணிக்கு போட்டியாக யாரும் பேரணி அல்லது ஆர்ப்பாட்டங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தற்போது ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.