பள்ளிகளை சீரமைக்க சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா சென்னைக்கான பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது சுழற்சி முறையில், ரூ.11 லட்சம் செலவில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5,200 மாணவ-மாணவிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இதன் துவக்கமாக இன்று(ஜூலை.,8) 521 மாணவர்கள் பிர்லா கோலரங்கம், அண்ணா நூலகம், போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இதனையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் இருந்து மாணவர்கள் செல்லும் பேருந்துகளை மேயர் பிரியா கொடியசைத்த வழி அனுப்பி வைத்தார். இந்த கல்வி சுற்றுலா திட்டத்தினை துவக்கி வைத்த மேயர் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பாதியிடங்களில் பெண்கள் தான் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்
அப்போது அவர், "சென்னை மாவட்டப்புறநகரில் இருந்த 139 பள்ளிகள் புதிதாக சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சேதமடைந்த நிலையில் காணப்படும் 46 பள்ளிகளை கண்டறிந்து, அதிலுள்ள சேதங்களை சரிசெய்ய சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.50கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். தொடர்ந்து அவர்,"திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பாதியிடங்களில் பெண்கள் தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். இக்கட்சியில் இதுவரை எவ்வித ஏற்றத்தாழ்வினையும் நான் எதிர்கொண்டதில்லை" என்றும் கூறியுள்ளார். இதனிடையே, மழைநீர் வடிகால்கள் பணிகள் கடந்தாண்டு முதல் நடந்துவரும்நிலையில், செப்டம்பர் 15ம்தேதிக்குள் செய்து முடிக்கவேண்டும். இல்லையெனில் ஒப்பந்தத்தாரர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பப்படும், அதன்பின்னர் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் தூர்வாரும்பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் செய்துமுடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.