அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகளை பெற வேண்டாம் என சுற்றறிக்கை
இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் ரூ.2,000 நோட்டுகளை வைத்துள்ளவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் பரவியது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்து பொது மேலாளர் இயக்குனர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, செப்.,30ம் தேதிக்குள் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. அதன்படி தமிழக அரசு போக்குவரத்து கழகத்தால் ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
வசூலான பணத்தினை மற்றவர்களிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்
எனவே நாளை(மே.,22) முதல் தமிழ்நாடு அரசு பேருந்து நடத்துனர்கள் அனைவரும் ரூ.2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், பேருந்தில் வரும் பயணிகளுக்கு எவ்வித இடையூறும் அளிக்காமல் பக்குவமான முறையில் இது குறித்து எடுத்துக்கூறி பயணிகளிடமிருந்து ரூ.2,000 நோட்டுகளை வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். அதே போல் வசூலான பணத்தினை மற்றவர்களிடம் மாற்றம் செய்து கொள்வதையும் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, தினசரி வசூலில் ஒவ்வொரு கிளையிலும் நடத்துனர்களால் செலுத்தப்படும் ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.