வங்கி கணக்குகளில் க்ரெடிட்டானது ரூ.1000 - மகிழ்ச்சியில் குடும்பத்தலைவிகள்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது தமிழ்நாடு முழுவதும் நாளை(செப்.,15) முதல் துவங்கி வைக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவுற்று இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறவுள்ளனர் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்ட பயனாளர்கள் அனைவருக்கும் பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். இந்நிலையில், நாளைய தினம் ஒரேயடியாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோரின் வங்கிக்கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படும் பொழுது ஒருசில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
வங்கி மற்றும் அரசு தரப்புகளில் இருந்து பணம் அனுப்பப்பட்டதற்கான மெசேஜ் அனுப்பப்படும்
அதேபோல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் பணம் சென்று சேர கால தாமதம் ஏற்படக்கூடும் என்றும் தெரிகிறது. இதனால் அநேக பயனாளர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கும் பணியில் தமிழக அரசு இன்றே(செப்.,14) இறங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான மெசேஜ் வங்கி மற்றும் அரசு தரப்புகளில் இருந்து மொபைல் போனிற்கு அனுப்பப்படுமாம். நாளை மாலைக்குள் அனைவரது வங்கி கணக்கிலும் பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்னும் முதல்வரும் அறிவுறுத்தல்படி அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையினை இன்றே துவக்கியுள்ளனர். இதனிடையே, தங்கள் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டிருக்கும் செய்தியினை கண்டு இல்லத்தரசிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.