எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா சட்டசபை தேர்தல் குறித்து பல தரப்பில் இருந்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்தியாவின் அறிவுசார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மங்களூரு மருத்துவர் நரேந்திர நாயக் ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி கர்நாடகாவில் எந்த ஆட்சியினை பிடிக்கும்? காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றியடையும்? மற்ற கட்சியினர் எத்தனை இடங்களில் வெற்றிபெறுவர்? எத்தனை பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள் உள்ளிட்ட 20 கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
இந்த அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து வெற்றியினை மிக சரியாக கணித்து கூறும் ஜோதிடருக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக அந்த மருத்துவர் அறிவித்துள்ளார்.
மருத்துவர்
1991ம் ஆண்டு முதல் ஜோதிடர்களுக்கு சவால் விடும் மருத்துவர்
பல வருடங்களாக ஜோதிடர்களுக்கு கேள்விகள், பரிசுகள் என்று சவால் விடும் இந்த மருத்துவர் கடந்த 2009ம் ஆண்டு 25 கேள்விகள் கொண்ட சவாலினை அறிவித்து ரூ.1 லட்சம் பரிசுத்தொகையினையும் அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அறிவியல் உணர்வினை அதிகரிப்பதே எனது நோக்கம்.
ஜோதிடமும் ஒரு அறிவியல் தான் என்று நிரூபிக்கப்பட்டால் நான் ஒப்புக்கொள்கிறேன்.
வாழ்க்கையானது அறிவியல் கட்டமைப்பில் அமைத்திட வேண்டும், எதிர்காலம் உருவாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவர் நரேந்திர நாயக் கடந்த 1991ம் ஆண்டு முதல் ஜோதிடர்களுக்கு இவ்வாறு சவால்களை விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.