சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது
சென்னை நொளம்பூரில் உள்ள ஏ.ஆர்.டி. நகை கடையில் பணிபுரியும் ஆசிக் மற்றும் அந்தோணி ஆகியோரிடம் இருந்து ரூ.1 கோடி மதிக்கத்தக்க 3 கிலோ எடையுள்ள தங்கநகைகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பறித்து செல்லப்பட்டது என்று செய்திகள் வெளியானது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், அந்த குறிப்பிட்ட நகைக்கடையில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் விகிதம் 4 வாரத்திற்கு 12 ஆயிரம் வட்டியாக தருவதாக கூறியுள்ளார்கள். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக பணத்தினை சரிவர வழங்காமல் இருந்துள்ளனர். இதில் நகைக்கடையில் முதலீடு செய்த ஒருவரின் மூலம் 30 பேர் முதலீடு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு வாரமாக வட்டி கொடுக்காத காரணத்தினால் நகையை பறித்த நபர்
இதனை தொடர்ந்து முதலீடு செய்தவர்களுக்கு ஒரு வாரமாக வட்டி தராத காரணத்தினால் அந்த நபர் நகைகளை பறித்து சென்றுள்ளார் என்று போலீசார் தற்போது தெரிவித்துள்ளார்கள். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தனக்கு பழக்கமானவர்கள் செய்த முதலீட்டு தொகையினை திருப்பி தராத காரணத்தினால் நகை கடை ஊழியர்கள் கொண்டு சென்ற அந்த 3 கிலோ எடையுள்ள தங்க நகைகளை முதலீடு செய்த நபர் கொண்டு சென்றுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா நகர் உதவி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.