தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன்
நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகத்தில் அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் 75 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வருமாறு கூறியுள்ளார். தமிழகத்தில் இதுவரை 9 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்தினை உணவில் அளிக்க ஆலோசனை நடத்தி, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 45 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை, செவித்திறன் குறைபாடு போன்றவைகள் இருக்கும் பட்சத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
புரிதல் இல்லாமல் அவதூறு பரப்பி பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க.வினர்
மேலும் ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு சத்தான இனிப்பு வகை ஒன்றினை வழங்கும் புது திட்டமும் நடைமுறை படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கூறியது, அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக பா.ஜ.க., பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள். 1996ம் ஆண்டில் இருந்தே முட்டைகளை தண்ணீரில் போட்டு, அழுகிய முட்டைகளை தனியே எடுத்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அந்த வகையில் திருப்பி அனுப்ப வைக்கப்பட்டிருந்த முட்டைகளை போட்டோ எடுத்து பா.ஜ.க.,வினர் தவறாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இது குறித்த புரிதல் இல்லை. தமிழகத்தில் உள்ள எந்த அங்கன்வாடிகளுக்கும் அழுகிய முட்டைகள் வழங்ப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.