LOADING...
சபரிமலையில் விரைவில்  2.7 கி.மீ. ரோப் கார் சேவை: 2026 மண்டல சீசனுக்குள் துவங்க இலக்கு
சபரிமலையில் விரைவில் 2.7 கி.மீ. ரோப் கார் சேவை

சபரிமலையில் விரைவில்  2.7 கி.மீ. ரோப் கார் சேவை: 2026 மண்டல சீசனுக்குள் துவங்க இலக்கு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 09, 2025
09:11 am

செய்தி முன்னோட்டம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் வசதிக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளுக்காகவும் அமைக்கப்படவுள்ள ரோப் கார் திட்டத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் 2026-ஆம் ஆண்டு மண்டல பூஜை சீசனுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசவன் தெரிவித்துள்ளார். பம்பா மலை உச்சி முதல் சன்னிதானம் அருகே உள்ள மாளிகைப்புரம் காவல்துறை குடியிருப்பு வரை சுமார் 2.7 கி.மீ. தூரத்திற்கு இந்த ரோப் கார் அமைக்கப்பட உள்ளது. இதன் திட்ட மதிப்பு சுமார் ₹150 கோடி முதல் ₹250 கோடி வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அனுமதி

பம்பை முதல் சன்னிதானம் வரையிலான 2.7 கி.மீ. திட்டத்திற்கு அனுமதி

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை பெறுவதுதான் இத்திட்டத்தின் முக்கிய தடையாக இருந்தது. அதற்கு மாற்றாக, கொல்லம் மாவட்டத்தில் உள்ள நிலம் வனத்துறைக்கு மாற்றுவது தொடர்பான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கேரள வனவிலங்கு வாரியம் இத்திட்டத்திற்கான கள ஆய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இறுதி அனுமதிக்குக் காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரோப் கார் சேவை தொடங்கப்பட்டால், பம்பையிலிருந்து சன்னிதானம் வரையிலான பயண நேரம் 15 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் சிரமமின்றி சுவாமியை தரிசிக்க இத்திட்டம் உதவும். ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு வந்ததும், அதிக செலவு பிடிக்கும் 'டோலி' சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement