LOADING...
இந்திய அணுசக்தி துறையில் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் தலைவராக தமிழக பெண் ஆர்.எம். நாச்சம்மை நியமனம்
இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் அணுமின் நிலைய செயல்பாடுகளை கவனிக்கும் முதல் பெண் தலைவராக ஆர்.எம்.நாச்சம்மை நியமனம்

இந்திய அணுசக்தி துறையில் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் தலைவராக தமிழக பெண் ஆர்.எம். நாச்சம்மை நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2026
04:30 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் அணுசக்தித் திட்ட வரலாற்றில் ஒரு மகத்தான தருணமாக, செயல்பாட்டில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் முதல் பெண் தலைமை கண்காணிப்பாளராக ஆர்.எம்.நாச்சம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணுமின் கழகத்தின் கீழ் இயங்கும் இந்த உயரிய பொறுப்புக்கு ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் இந்த நியமனத்தின்படி, கர்நாடகாவின் கைகா அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆகிய அலகுகளின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்கிறார். அணுமின் நிலையத்தின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் பொறியியல் ஆதரவு ஆகிய முக்கியப் பிரிவுகளை இவர் வழிநடத்துவார். 24 மணிநேரமும் அணு உலைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டைக் கண்காணிக்கும் முக்கிய பொறுப்புக்கு அவர் தலைமையேற்பது பெண்சக்தியின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.

சாதனை

சாதனைப் பயணம்: சென்னை டூ கைகா

ஆர்.எம். நாச்சம்மையின் 35 ஆண்டுகால கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அவரை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 1990இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் மின்னணு பொறியியலில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். 1991இல் இந்திய அணுமின் கழகத்தில் இணைந்த இவர், பயிற்சிப் பொறியாளர்களுக்கான விக்ரம் சாராபாய் விருதை வென்றார். மேலும், 2010, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணுமின் கழகத்தின் சிறப்புப் பங்களிப்பு விருதுகளையும் பெற்றுள்ளார். சென்னை அணுமின் நிலையம் மற்றும் கைகா அணுமின் நிலையத்தின் பல்வேறு அலகுகளில் பணியாற்றி அபாரமான அனுபவத்தைப் பெற்றுள்ளதோடு, சர்வதேசத் தளங்களில் இந்தியாவின் அணுசக்திப் பாதுகாப்பு குறித்துப் உரையாற்றியுள்ளார்.

பாலின இடைவெளி

பாலின இடைவெளி குறையுமா?

இந்திய அணுமின் கழகத்தில் உள்ள சுமார் 10,000 ஊழியர்களில் வெறும் 900 பேர் மட்டுமே பெண்கள். இத்தகைய சூழலில், நாச்சம்மையின் இந்த வளர்ச்சி, அணுசக்தித் துறையில் இணைய விரும்பும் இளம் பெண்களுக்குப் பெரும் ஊக்கமாக அமையும். 2047க்குள் இந்தியா 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இதுபோன்ற பெண் தலைவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று இந்திய அணுமின் கழக தலைவர் பி.சி.பதக் தெரிவித்துள்ளார்.

Advertisement