Page Loader
தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS
இறையன்பு விடுத்த கோரிக்கையை தமிழக அரசு கருத்தில் கொண்டு, சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க உத்தரவு அளித்துள்ளது

தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் டிரைவர்களுக்கு தங்கும் வசதி கட்டாயம்; காரணமான இறையன்பு IAS

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2023
03:21 pm

செய்தி முன்னோட்டம்

சென்ற வாரம் வெளியான தமிழக அரசின் ஆணைப்படி, இனி மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில், தங்கவருபவர்களின் வாகன ஓட்டிகளுக்கு, வாகனம் நிறுத்தும் இடத்துக்கு ஏற்ப, தனி படுக்கையறைகள் மற்றும் ஓய்வறைகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 28 (புதன்கிழமை) அன்று, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்ட உத்தரவில், விடுதி வளாகத்திலோ அல்லது ஹோட்டலில் இருந்து 250 மீட்டர் தூரத்திலோ டிரைவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட வேண்டும். இதற்கான கட்டணத்தை, மலிவு விலையில் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தங்கும் அறையில், படுக்கை வசதியும், குளியலறையும் இருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழ்நாட்டில் பலராலும் வரவேற்கப்பட்டது. எனினும் இந்த உத்தரவிற்கு காரணம் யார் தெரியுமா?

card 2

முன்னாள் அரசு செயலர் இறையன்பு IAS

சென்ற வாரம் ஓய்வு பெற்ற அரசு செயலர் இறையன்பு IAS தான் இந்த உத்தரவிற்கு காரணம் எனக்கூறுகிறார்கள். அவர் சமூகம் சார்ந்த பல அதிரடி முடிவுகள் எடுப்பார் என்று பரவலான பேச்சு உண்டு. உதாரணமாக புத்தக திருவிழா, பசுமை மயானம் அவரின் யோசனையே. அதன் தொடர்ச்சியாக, வீடு வசதித்துறை செயலர் அபூர்வாவுக்கு, வாகன ஓட்டிகளின் சார்பாக ஒரு கடிதம் எழுதி இருந்தாராம் இறையன்பு. அதில், "சுற்றுலாவுக்காக வெளியூர் செல்வோர், ஹோட்டலில் அறை எடுத்து தங்குகின்றனர். ஆனால், ஓட்டுனர்களோ, வாகனங்களில் தங்கும் நிலைமையே உள்ளது. இதனால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்பட்டு, விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. அதனால், அனைத்து ஹோட்டல்ளிலும், டிரைவர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் " என குறிப்பிட்டு இருந்தாராம்.