Page Loader
உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!
உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி

உரிமை கோரப்படாத பணத்தை திருப்பியளிக்க ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 20, 2023
06:06 pm

செய்தி முன்னோட்டம்

வங்கிகளில் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளில் உள்ள உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களிடம் திருப்பியளிக்கும் '100 Days 100 Pays' என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. பத்து வருடங்களுக்கு மேல் செயல்பாட்டில் இல்லாத வங்கிக்கணக்கில் இருக்கும் டெபாசிட்களும், டெர்ம் டெபாசிட் திட்டங்களில் முதிர்வடைந்த தேதியில் இருந்து 10 வருடங்களில் கோரப்படாத டெபாசிட்களும் உரிமை கோரப்படாத பணமாகக் கருதப்படும். இப்படி தங்கள் வங்கியில் இருக்கும் உரிமை கோரப்படாத பணத்தை ரிசர்வ் வங்கியின் Depositer Education and Awareness Fund-ல் பிற வங்கிகள் செலுத்திவிடும். இதுவே இதுவரை நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், தற்போது உரிமை கோரப்படாத பணத்தை உரிய நபர்களைக் கண்டறிந்து ஒப்படைக்க 100 Days 100 Pays திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரிசர்வ் வங்கி

100 Days 100 Pays: 

இந்தப் புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு வங்கியும் இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 உரிமை கோரப்படாத கணக்குகளின் பணத்தை 100 நாட்களுக்குள் உரிய நபரைக் கண்டறிந்து ஒப்படைக்க வேண்டும். இந்தப் புதிய திட்டத்தின் மூலம் உரிமை கோரப்படாத பணத்தின் அளவைக் கணிசமாகக் குறைக்க முடியும் என நம்புகிறது ரிசர்வ் வங்கி. இந்த புதிய திட்டத்தை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் துவங்க வேண்டும் என நாட்டின் பிற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் தகவல்களின் படி கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை மட்டும் இந்தியா முழுவதும் ரூ.35,012 கோடி உரிமை கோரப்படாத தொகை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.