நாளை நீட் மறுதேர்வு எழுதப் போறீங்களா? அட்மிட் கார்டுடன் இந்த ஒரு ஃபார்ம் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க! உடனே செக் பண்ணுங்க
செய்தி முன்னோட்டம்
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளங்கலை நீட் மறுதேர்வு நாளை (ஜூன் 21) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த இறுதி நேரத்தில், தேர்வெழுதச் செல்லும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக, தேர்வு மையத்திற்குள் அனுமதி பெறுவதற்கு அட்மிட் கார்டுடன் சேர்த்து, அதனுடன் வழங்கப்பட்டுள்ள சுயவிவரப் படிவத்தையும் பூர்த்தி செய்து எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விபரம்
சுயவிவரப் படிவம் என்றால் என்ன?
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அட்மிட் கார்டு பிடிஎஃப் கோப்புடன் இந்த சுயவிவரப் படிவமும் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விபரப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்வதும், தேர்வு மையத்தில் நடக்கும் சரிபார்ப்புச் செயல்முறைக்கு இதனை சமர்ப்பிப்பதும் விதிகளின்படி மிக இன்றியமையாதது ஆகும்.
கவனம்
படிவத்தைப் பூர்த்தி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
தேசிய தேர்வு முகமை விதித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, இந்த சுயவிவரப் படிவத்தில் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை ஒட்ட வேண்டும். இந்த புகைப்படம், நீங்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது பதிவேற்றிய அதே புகைப்படமாக இருக்க வேண்டும் என்பது விதியாகும். மேலும், படிவத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களது இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். இறுதி நேரத்தில் பதற்றத்தைத் தவிர்க்க, இதனை இன்றே செய்து முடிப்பது நல்லது.
தனிநபர் விபரங்கள்
தனிப்பட்ட விபரங்களைச் சரிபார்த்தல்
படிவத்தில் அச்சிடப்பட்டுள்ள உங்களது பெயர், விண்ணப்ப எண், புகைப்படம் மற்றும் பிற தனிப்பட்ட விபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை மாணவர்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும். ஏதேனும் எழுத்துப் பிழைகளோ அல்லது விபரக் குறைபாடுகளோ இருந்தால், உடனடியாக அதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வு வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தேர்வு நாளான நாளை அட்மிட் கார்டு, சுயவிவரப் படிவத்துடன் ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்பட அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
எளிய முறைகள்
சுயவிவரப் படிவத்தை டவுன்லோடு செய்யும் எளிய முறைகள்
தேர்வர்கள் முதலில் நீட் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள 'Re-NEET UG 2026 Admit Card' என்ற லிங்க்கைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களின் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியைக் கொண்டு லாகின் செய்ய வேண்டும். இப்போது திரையில் தோன்றும் அட்மிட் கார்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சுயவிவரப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.