அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI
அதானி குழும பிரச்சனைகளுக்கு இடையே நாட்டின் வங்கித் துறை நிலையாக உள்ளது என்று RBI நேற்று(பிப் 3) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "ரிசர்வ் வங்கியின் தற்போதைய மதிப்பீட்டின்படி, வங்கித் துறை வளைந்து கொடுக்க கூடியதாகவும், நிலையானதாகவும் உள்ளது. வணிக நிறுவன பிரச்சனைகள் இந்திய வங்கிகளைப் பாதிக்காலம் என்று செய்திகள் வெளியாகி இருந்ததை தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கையை RBI வெளியிடுகிறது. போதுமான மூலதனம், சொத்து மதிப்பு, லிக்குடிட்டி, ஒதுக்கீடுகள், லாபம் ஆகியவை அனைத்தும் இந்திய வங்கிகளில் ஆரோக்கியமாக உள்ளது." என்று RBI அந்த அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், வங்கிகள், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அனைத்தையும் சமாளிக்கும் திறன் கொண்ட "வழிகாட்டுதல்களுடன் இணங்குகின்றன" என்றும் RBI தெரிவித்துள்ளது.
சரிந்து வரும் சாம்ராஜ்யம்: ஹிண்டன்பர்க் VS அதானி குழுமம்
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையில், அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது. மேலும், பங்குகளை கையாளுதல், கணக்கியல் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதானி குழும பங்குகள் வெகுவாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஒருங்கிணைந்த மதிப்பு $120 பில்லியனுக்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது. இது அதானி குழுமத்தின் மொத்த மதிப்பில் பாதியாகும். ஆனால், அதானி குழுமம் ஹிண்டன்பர்க் அறிக்கையை "தவறான தகவல்" என்று விமர்சித்திருந்தது.