ராமநாதபுரம் மக்களுக்கு குட் நியூஸ்! மே 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், ஏர்வாடி தர்ஹாவில் நடைபெறவுள்ள சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, மே 11 ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அந்த மாவட்ட அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், மே 23 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாகச் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
பின்னணி
விடுமுறை அறிவிப்பின் பின்னணி
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில், வருடாந்திர சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காகவும், மாவட்டத்தின் முக்கிய விழாவைக் கொண்டாடும் வகையிலும் மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. பொதுத் துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண் 154ன் படி, இந்த விடுமுறை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
விதிமுறைகள்
கருவூலச் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள்
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டத்தின் (Negotiable Instruments Act, 1881) கீழ் அறிவிக்கப்படாததால், அரசு அலுவலகங்களில் அத்தியாவசியப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. எனவே, மே 11 ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலகங்களும் (Sub-Treasuries), அவசர கால அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வேலைநாள்
ஈடு செய்யும் வேலைநாள்
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடு செய்யும் வகையில், வரும் மே 23 ஆம் தேதி சனிக்கிழமை, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும். எனவே, அன்றைய தினம் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கப்பட்ட நிலையில், மே மாதம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த உள்ளூர் விடுமுறை அரசு ஊழியர்களுக்குச் சற்று கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைத் தவிர, மற்ற மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கமான முறையில் செயல்படும் என்பதால், இது அந்த மாவட்டத்திற்கு மட்டுமே உரிய அறிவிப்பாகும்.