'1,000 ஆண்டுகளுக்கு ராம ராஜ்ஜியம்': ராமர் கோவில் தீர்மானத்தை நிறைவேற்றியது பாஜக
இன்று புது டெல்லியில் நடந்த பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டது "நாட்டின் வரலாற்று மற்றும் புகழ்பெற்ற சாதனை" என்று அக்கட்சி கூறியது. அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்றும், அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு இந்தியாவில் "ராம ராஜ்ஜியம்"(ராமரின் ஆட்சி) நிறுவப்படும் என்றும் பாஜக நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ஜேபி நட்டாவால் முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானம், பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பையும் பாராட்டியது. ஜனவரி 22 அன்று ராமர் கோவில் பெரிய அளவிலான திறப்பு விழாவின் மூலம் பிரதமர் மோடியின் தலைமையில் திறக்கப்பட்டது. பின்னர் அந்த கோவில் வளாகம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
"ராம ராஜ்ஜியம் தான் இந்திய அரசியலமைப்பின் முன்னோடி"
எனினும், பல எதிர்க்கட்சித் தலைவர்கள் "இது பிரச்சாரம் செய்யும் அரசியல் நிகழ்வு" என்று கூறி இந்த விழாவை புறக்கணித்தனர். பாபர் மசூதியின் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது பல ஆண்டுகளாக பாஜகவின் முக்கிய தேர்தல் திட்டமாக இருந்து வந்தது. மகாத்மா காந்தியும் ராம ராஜ்ஜியம் என்ற யோசனையை மிக முக்கியமாக கருதினார் என்றும், அதை உண்மையான ஜனநாயகத்தின் சின்னமாக அவர் பார்த்தார் என்றும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கூறுகிறது. ஜனநாயக விழுமியங்களையும், அனைவருக்கும் நீதியையும் ஊக்குவிப்பதால், ராம ராஜ்ஜியம் தான் இந்திய அரசியலமைப்பின் முன்னோடி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.