ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மேலும் 13 கோயில்கள் கட்ட திட்டம்
செய்தி முன்னோட்டம்
அயோத்தியாவில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, மேலும் 13 கோவில்களை கட்ட, ராமர் கோவில் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இது பற்றி, ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி குருதேவ் கிரிஜி NDTVயிடம் கூறுகையில், பிரதான கோவிலின் நிறைவு உட்பட அனைத்து கட்டுமான பணிகளும் ஒருசேர நடைபெற்று வருகின்றன எனத்தெரிவித்துள்ளார்.
அயோத்தியை உலகளாவிய ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்ற, விரிவான திட்டங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டப்படவுள்ள 13 புதிய கோயில்களில், ஆறு பெரிய கோயில் வளாகத்திற்கு உள்ளேயும், ஏழு கோயில்கள் வெளியேயும் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.
தற்போது, பிரதான கோவிலின் இரண்டாவது தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பின்னர், குவிமாடம் அமைக்கும் பணி நடைபெறும்.
card 2
கட்டப்படவுள்ள புதிய கோவில்கள் என்ன?
ராமர் கோவில் வளாகத்தில், கணபதி, சிவன், சூரிய கடவுள் மற்றும் ஜகதம்பா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் கட்டப்படும். இந்த கோவில்கள், பிரதான கோவிலின் நான்கு மூலைகளிலும் அமைந்திருக்கும்.
அதோடு ராமரின் மிகப்பெரிய பக்தரான அனுமாருக்கும் கோவில் அமைக்கப்படும்.
இக்கோயில்களில் சிலைகள் நிறுவப்படும் பணி ஏற்கனவே நடந்து வருகிறது. மெருகூட்டல் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே பாக்கி உள்ளதாம்.
அதோடு சீதாதேவியின் சமையலறை என்று கருதப்படும் இடத்தில், அன்னபூரணிக்கு கோயில் இருக்கும்.
"கோவில் வளாகத்திற்கு வெளியே, ஏழு கோவில்கள் இருக்கும். இவை ராமரின் வாழ்வில் பங்கு கொண்டவர்கள்- வால்மீகி, வசிஸ்ட், விஸ்வாமித்திரர், தேவி ஷாவரி மற்றும் ராமருக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த ஜடாயு ஆகியோருக்காக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.