ரயில்வே பட்ஜெட் 2024: வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கும் 40,000 ரயில் பெட்டிகள்
இந்த நிதியாண்டில் இந்திய ரயில்வேக்கு ரூ. 2.55 லட்சம் கோடி மூலதனச் செலவினங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்யும் போது இதை அறிவித்தார். இது 2023- 24 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 2.4 லட்சம் கோடியிலிருந்து சற்றே அதிகமாகும். மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதிக்காக 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தனது உரையில் கூறினார். இடைக்கால பட்ஜெட்டில் மூன்று புதிய ரயில் வழித்தடங்களுக்கான திட்டங்களும் வெளியிடப்பட்டன.
புதிய இரயில்வே வழித்தடங்கள் சிறப்பம்சங்கள்
புதிதாக வர இருக்கும் இரயில்வே வழித்தடங்கள் இணைப்புகளை மேம்படுத்தும், செலவுகளைக் குறைக்கும் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் என்று நிதியமைச்சர் கூறினார். PM கதி சக்தி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த வழித்தடங்களில், எரிசக்தி, கனிம மற்றும் சிமெண்ட் தாழ்வாரம், துறைமுக இணைப்புத் தாழ்வாரம் மற்றும் அதிக போக்குவரத்து தாழ்வாரம் ஆகியவை அமைக்கப்படும். பொது தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுவாகும். முழு பட்ஜெட்டை அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் ஜூன் மாதம் தாக்கல் செய்யும்.