சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்
தமிழ்நாடு மாநில தலைநகர் சென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம் பகுதியில் எழிலகம் என்னும் பொதுப்பணித்துறை வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் நீர்வளத்துறை போன்ற பல துறை சார்ந்த அலுவலக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நீர்வளத்துறை கீழ் செயல்பட்டு வரும் கடல் அரிப்பை தடுக்கும் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன். இவர் ஒப்பந்ததாரரின் பதிவுகள், லைசன்ஸ்களை புதுப்பித்து கொடுக்க லஞ்சம் வாங்கியதாக புகார்கள் அவர்மீது எழுந்துள்ளது. இந்த புகார்கள் அடிப்படையில், சென்னை எழிலகத்தில் உள்ள பாஸ்கரனின் அலுவலகத்தில் நேற்று(ஜூலை.,6) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
வேறு சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்
இந்த சோதனையானது நள்ளிரவு 2 மணிவரை தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது அதிகாரிகள் பாஸ்கரனின் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 540 ரூபாயினை பறிமுதல் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் உதவி செயற்பொறியாளரான பாஸ்கரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த அழைத்து சென்றுள்ளனர். டி.எஸ்.பி. தமிழ்மணி தலைமையில் எழிலகத்தில் நடந்த இந்த சோதனையினை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின் போது வேறு சில முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.