அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி அமைச்சருக்கு தொடர்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சி.ஆர்.பி.எப். வீரர்களின் பாதுகாப்புடன் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், சென்னையில் அவருடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை
நேற்று(நவ.,3) காலை துவங்கிய இந்த சோதனையானது 2வது நாளாக இன்றும்(நவ.,4) நடத்தப்படுகிறது.
தற்போது திருவண்ணாமலை சுப்புலட்சுமி நகரில் அமைந்துள்ள இவரது மகனான எ.வ.கம்பன் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
24 மணிநேரத்தினை தாண்டி நடத்து வரும் இந்த ரெய்டு இன்று முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்னும் தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.
ரெய்டு முற்றிலும் நிறைவடைந்த பின்னர் இது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு ஏற்கனவே அமைச்சர் எ.வ.வேலுவின் தொடர்புடைய பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்தனர் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.