எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில்
மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு அனுப்பப்பட்ட வெளியேற்ற நோட்டீசுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மார் 28) பதிலளித்துள்ளார். "கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக, நான் அங்கு கழித்த காலம் மிகவும் மகிழ்ச்சியானது. எனது உரிமைகளுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களுக்கு நிச்சயமாக நான் கட்டுப்படுவேன்." என்று ராகுல் காந்தி தனது கடிதம் மூலம் பதிலளித்துள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி வாழ்ந்து வந்த 12 துக்ளக் லேன் இல்லத்தை காலி செய்யுமாறு நேற்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதில்
விதிகளின்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி அரசு பங்களாவில் தங்க முடியாது. பங்களாவை காலி செய்ய அவருக்கு ஒரு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததால் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில், ராகுல் காந்தியை வெளியேற்ற அனுப்பப்பட்டிருக்கும் நோட்டீசால் பிரச்சனைகள் இன்னும் பெரிதாகி இருக்கிறது. "அவரை (ராகுல் காந்தி) பலவீனப்படுத்த அவர்கள்(பாஜகவினர்) என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர் தன் அம்மாவின் வீட்டில் சென்று தங்குவார் அல்லது என்னிடம் வருவார். நான் அவருக்காக ஒரு வீட்டை ஏற்பாடு செய்து தருவேன். அச்சுறுத்தும், பயமுறுத்தும், அவமானப்படுத்தும் மத்திய அரசின் இந்த போக்கை கண்டிக்கிறேன்." என்று இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலளித்துள்ளார்.