ராகுல் காந்தி தனது அரசு பங்களாவை திரும்ப பெற்றார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி அவருக்கு திரும்ப கிடைத்ததை அடுத்து, முன்பு அவர் தங்கி இருந்த 12 துக்ளக் லேன் அரசு பங்களா அவருக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் அந்த பங்களாவை விட்டு வெளியேற்றப்பட்டார். மோடி குடும்பப்பெயர் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவரது எம்பி பதவி சில மாதங்களுக்கு முன் பறிக்கப்பட்டது. சென்ற வாரம், இந்த வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி
இதனையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்த மக்களவை செயலகம், நேற்று அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது. இந்நிலையில், 2005ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி வாழ்ந்து வந்த 12 துக்ளக் லேன் எம்பி பங்களாவும் அவருக்கு மீண்டும் கிடைத்துள்ளது. 12 துக்ளக் லேனில் உள்ள எம்பி பங்களாவை ஏப்ரல்-22ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதிக் குழு முன்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அந்த நோட்டீஸுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, "கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக, நான் அங்கு கழித்த காலம் மிகவும் மகிழ்ச்சியானது. எனது உரிமைகளுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களுக்கு நிச்சயமாக நான் கட்டுப்படுவேன்." என்று கூறியிருந்தார்.