ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம்
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி இன்று(மார் 24) எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பப் பெயரைப் பற்றி தவறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் 52 வயதான ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்திருந்தது. அதன் பின், அதற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தியின் தண்டனை 30 நாட்களுக்கு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இன்று காலை 11:30 மணி அளவில், அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் இருந்து ராஷ்டிரபதி பவனுக்கு பேரணியாக செல்லும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது மிகவும் தீவிரமான அரசியல் பிரச்சினை: காங்கிரஸ்
"இது ஒரு சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, இது நமது ஜனநாயகத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடைய மிகவும் தீவிரமான அரசியல் பிரச்சினையாகும். மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கும், மிரட்டல் அரசியலுக்கும், துன்புறுத்தல் அரசியலுக்கும் இது ஒரு சிறந்த உதாரணம்." என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி இருந்தார். இதற்காக காங்கிரஸ் தலைவர் எம் கார்கேவின் இல்லத்தில் நேற்று ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுவது மற்றும் மாநிலங்களில் போராட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் தங்கள் வாதத்தை முன்வைக்க கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.