தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் - தமிழக அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் கேழ்வரகு உற்பத்தியினை பெருக்கி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ஊட்டி அருகேயுள்ள பாலகொலா மலை கிராமத்தில் நாளை(மே.,3)முதல் இந்த விநியோகம் துவங்கும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், கேழ்வரகு வழங்கும் திட்டத்திற்காக 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு மத்திய உணவு கழகத்திலிருந்து ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அதில் நீலகிரிக்கு ஒரு மாதத்திற்கு 400 மெட்ரிக்டன் கேழ்வரகு தேவைப்படும். ஆனால் தற்போது 482 மெட்ரிக் டன் கேழ்வரகு இருப்புள்ளது என்று தெரிவித்தார்.
சிறுதானிய ஆண்டு என அறிவிப்பு - விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
மேலும் பேசிய அவர், தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் அளவுக்கு கேழ்வரகு இருப்பு இல்லாத காரணத்தினால் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முதலில் இந்த விநியோகம் துவங்கப்படுகிறது. பின்னர் படிப்படியாக இந்த விநியோகமானது விரிவுபடுத்தப்படும் என்று கூறினார். உலக அளவில் சிறுதானிய ஆண்டு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த தற்போது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவு துறை மூலம் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனுடன் வேளாண்துறையுடன் இணைந்து சிறுதானியம் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.