இந்திய விவசாயிகளுக்கு உரம் விநியோகம் அதிகரிக்கப்படும்: வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரிடம் ரஷ்யா அதிபர் உறுதி
செய்தி முன்னோட்டம்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்திய-ரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்பைப் பாராட்டிய புடின், இந்திய விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிலிருந்து உரம் விநியோகம் தொடர்ந்து உயர்த்தப்படும் என உறுதியளித்தார். சமீபத்திய சந்திப்பில் பேசிய அதிபர் புடின், ரஷ்யா மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகப் பங்களிப்பு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இருநாடுகளுக்கும் இடையிலான இந்த சாதகமான வர்த்தக வேகத்திற்கு பிரதமர் மோடி எடுத்துவரும் தனிப்பட்ட கவனமும் முக்கிய காரணம் என அவர் பாராட்டு தெரிவித்தார்.
உரங்கள்
விவசாயத் துறைக்கு உரங்கள் தொடர் விநியோகம்
இந்தியாவின் விவசாயத் துறைக்குத் தேவையான உரங்களின் தடையற்ற விநியோகத்தை ரஷ்யா தொடர்ந்து உறுதி செய்யும் என புடின் உறுதியளித்துள்ளார்.
ஆற்றல் விநியோகம் மட்டுமல்லாது, இந்திய விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உரம் ஏற்றுமதியை ரஷ்யா அதிகரித்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆற்றல் மற்றும் விவசாயத் துறைகள் மட்டுமின்றி, அணுசக்தி, உயர் தொழில்நுட்பக் கூட்டுறவு உள்ளிட்ட பிற முக்கியக் துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து சீரான முறையில் முன்னேறி வருவதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
டெல்லி மற்றும் மாஸ்கோ இடையே பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் நோக்கிலான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உயர்மட்டச் சந்திப்பு அமைந்துள்ளது.