பூரி ரத யாத்திரையில் கலந்து கொண்டார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
ஒடிசாவின் கடலோர யாத்ரீக நகரமான பூரியில் வருடாந்திர ஜெகநாதர் ரத யாத்திரை இன்று தொடங்கியது. 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இவ்விழா இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெறு உள்ளது. இன்று யாத்திரையில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுடன் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் இணைந்தார். அவரது வருகைக்காக முதல்வர் மோகன் மஜி தலைமையிலான ஒடிசா அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வழக்கமாக ஒரே நாளில் நடத்தப்படும் இந்த ரத யாத்திரை சில வானவியல் நிகழ்வு காரணமாக இந்த ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
3 கிலோமீட்டர் தூரத்திற்கு தேரை இழுத்து செல்லும் பக்தர்கள்
பூரி ரத யாத்திரை என்பது விஷ்ணுவின் அவதாரமான ஜெகன்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க இந்து பண்டிகையாகும். இந்த திருவிழாவின் போது, ஜகந்நாதரின் சிலைகள், அவரது உடன்பிறப்புகளான பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவிகளின் சிலையோடு சேர்த்து, பிரமாண்டமான தேர்களில் வைக்கப்பட்டு, தேரடி வீதிகளில் இழுத்து செல்லப்படும். இந்த ஊர்வலம் ஜெகநாதர் கோவிலில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள குண்டிச்சா கோவிலில் முடிவடைவும். எப்போதும் போல் அல்லாமல், இந்த ஆண்டு, திருவிழா தொடர்பான சில சடங்குகளும் ஒரே நாளில் நடத்தப்படும். இந்த சடங்குகளில் 'நபஜௌபன் தர்ஷன்' மற்றும் 'நேத்ரா உத்சவ்' ஆகியவை அடங்கும். இவை பொதுவாக ரத யாத்திரைக்கு முன்னதாக நடத்தப்படும் சடங்குகளாகும்.