Loading...
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் நெரிசல்! 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! ஒருவர் பலி?
பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் நெரிசல்

பூரி ஜெகநாதர் ரத யாத்திரையில் நெரிசல்! 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! ஒருவர் பலி?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 16, 2026
05:46 pm

செய்தி முன்னோட்டம்

ஒடிசா மாநிலத்தின் கடலோர நகரமான பூரியில் உலகப் புகழ்பெற்ற ஜெகநாதர் ரத யாத்திரை இன்று (ஜூலை 16) விமரிசையாகத் தொடங்கியது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற புண்ணியத் தலத்திலிருந்து எம்பிரான் ஜெகநாதர், அவரது மூத்த சகோதரர் பாலபத்திரர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவி ஆகியோர் தங்களது வருடாந்திர பயணமாகக் குண்டிச்சா கோயிலுக்கு ரதங்களில் புறப்பட்டனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் காண நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரியின் முக்கிய வீதியான கிராண்ட் ரோடில் (படா தண்டா) திரண்டதால், அங்குப் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி

200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - ஒருவர் பலி?

ரத ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்ட நெரிசலால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

அவசரக்கால மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட சுமார் 200 பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காகப் பூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்த பக்தர் ஒருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நிர்வாகத் தரப்பிலிருந்து இந்த உயிரிழப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

மீட்புப் பணிகள்

போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்ட மீட்புப் பணிகள்

சம்பவம் நடந்தவுடன் சிறப்பு மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

நெரிசலான பகுதிகளிலிருந்து பக்தர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, தற்காலிக மருத்துவ முகாம்களில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த திடீர் அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கக் கூட்ட நெரிசல் மேலாண்மை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கூடுதல் பாதுகாப்பு

நிர்வாகம் எடுத்துள்ள கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்

நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் கிராண்ட் ரோடு முழுவதும் தற்பொழுது குவிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் மற்றும் அவசரக்கால மீட்பு வாகனங்கள் எவ்வித தடையுமின்றி எளிதாகச் சென்று வர ஏதுவாக, முக்கிய வீதிகளில் கூடுதல் தற்காலிக வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாகத்தின் மூலம் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு சோகம் 

கடந்த 2025 ஆம் ஆண்டு நடந்த சோகம்

இதற்கு முன்னதாகக் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ரத யாத்திரையின் போதும், ஸ்ரீ குண்டிச்சா கோவில் அருகே ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 3 பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்போது, புனிதம் வாய்ந்த பகுடா வழிபாட்டைக் காண அதிகாலை முதலே பக்தர்கள் காத்திருந்த வேளையில், சடங்குப் பொருட்களை ஏற்றி வந்த இரண்டு லாரிகள் கூட்டத்திற்குள் நுழைந்ததால் அந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூரி திருவீதிகள்

பக்தி பரவசத்தில் மூழ்கிய பூரி திருவீதிகள்

இந்தத் திடீர் சலசலப்புகளுக்கு மத்தியிலும், பூரி நகர் முழுவதும் ஆன்மீக அதிர்வலையில் மூழ்கியுள்ளது.

முரசுகள் முழங்க, சங்கு நாதங்கள் ஒலிக்க, சக்ரராஜ் சுதர்சனர் முதலில் மூலஸ்தானத்தில் இருந்து ரதத்திற்கு எழுந்தருளினார்.

அதற்குப் பிறகு, சூனிய பஹந்தி என்ற சிறப்பு ஊர்வலம் மூலம் சுபத்ரா தேவி தனது தர்பதாலன் தேருக்கு அழைத்து வரப்பட்டார்.

இறுதியாக, ஒட்டுமொத்த பக்தர்களின் ஜெய் ஜெகநாத் என்ற கோஷ முழக்கத்திற்கு இடையே ஜெகநாதர் தேருக்கு எழுந்தருளிய போது, ஒட்டுமொத்த ஆன்மீகக் கடலும் பக்தி பரவசத்தில் திளைத்தது.

ADVERTISEMENT