காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி
வாரிஸ் பஞ்சாப் தே தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை போலீசார் வலை விரித்து தேடி கொண்டிருக்கும் நிலையில், பஞ்சாப் மாநில ஐஜிபி சுக்செயின் சிங் கில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று, அம்ரித்பாலை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் தொடங்கினர். அம்ரித்பால் சிங் ஒரு தீவிர போதகர் மற்றும் பிரிவினைவாதி ஆவார். கடந்த மாதம், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இவர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. இவரது அமைப்பு சீக்கியர்களுக்கு 'காலிஸ்தான்', என்ற தனி தேசம் வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநில ஐஜிபி சுக்செயின் சிங் கில் கூறியதாவது:
வாரிஸ் பஞ்சாப் தே வழக்கில், இதுவரை 207 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் 30 பேர் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். 177 பேர் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அம்ரித்பால் எங்கு சென்றார் என்பதை ஆராய்ந்து வருகிறோம். போலீசார் அதை கண்காணித்து வருகின்றனர். பல இடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் பெறப்பட்டுள்ளன. ஹரியானா காவல்துறையின் உதவியுடன், பல்ஜீத் கவுர் என்ற பெண் கைது செய்யப்பட்டார். மார்ச் 19அன்று இரவு பப்பல்பிரீத் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் இருவரும் அந்த பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு தங்கிவிட்டு மறுநாள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம், விரைவில் அம்ரித்பால் சிங்கை கைது செய்துவிடுவோம்.