LOADING...
புனேவில் ஒரே இரவில் திடீரென மூடப்பட்ட ஐடி நிறுவனம்; 700 பேர் நடுத்தெருவில்
புனேவில் ஒரே இரவில் திடீரென மூடப்பட்ட திங்க் டெக் இந்தியா ஐடி நிறுவனம் (Representative image)

புனேவில் ஒரே இரவில் திடீரென மூடப்பட்ட ஐடி நிறுவனம்; 700 பேர் நடுத்தெருவில்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2026
02:51 pm

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிர மாநிலம் புனேயின் பிரதான ஐடி மையமான ஹிஞ்ஜவடி பகுதியில் இயங்கி வந்த தனியார் ஐடி நிறுவனம் ஒன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் தங்களின் சம்பளம், பணி சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பை இழந்து நடுத்தெருவில் தவிக்கும் அவலம் நேரிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'திங்க் டெக் இந்தியா' (Thynk Tech India OPC Pvt Ltd) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஹர்ஷல் தாக்கரே என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

வழக்கு

லேப்டாப் தருவதாக ₹15,000 பறிப்பு; சம்பளமும் இல்லை

ஹர்ஷல் தாக்கரே மீது ஏமாற்று வேலை மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் ஹிஞ்ஜவடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் மீது ஊழியர்கள் அடுக்கடுக்காக குற்றம் சுமத்தியுள்ளனர். அவற்றுள், கடந்த 1 முதல் 3 மாதங்களாக ஊழியர்கள் மற்றும் இன்டர்ன்களுக்குச் சம்பளமோ அல்லது உதவித்தொகையோ வழங்கப்படவில்லை, அலுவலகப் பயன்பாட்டிற்காக லேப்டாப் வழங்குவதாகக் கூறி, ஒவ்வொரு ஊழியரிடமிருந்தும் தலா ₹15,000 வீதம் இந்நிறுவனம் கட்டாய வசூல் செய்து ஏமாற்றியுள்ளதும் அடங்கும். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பத்தில் புதிய ஊழியர்களுக்குச் சரியாகச் சம்பளம் வழங்கியுள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பளம் தராமல் இழுத்தடித்து, ஊழியர்கள் கேட்கும் போதெல்லாம் அடுத்தடுத்து புது தேதிகளைக் கூறி ஏமாற்றி வந்துள்ளது.

சதி

பொறியியல் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்த சதி

இந்த போலி நிறுவனம் மகாராஷ்டிராவின் யவத்மால், ஜல்கான், நாசிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரிகளின் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் திறமையான இளம் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்துள்ளது. "பிரபலமான கல்லூரிகள் தங்களின் வளாக நேர்காணலுக்கு இந்த நிறுவனத்தை அனுமதித்ததால், அவர்கள் முறையான பின்னணி சரிபார்ப்பை செய்திருப்பார்கள் என்று நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்" என்று பாதிக்கப்பட்ட இன்டர்ன் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 அன்று ஊழியர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தபோது, நிறுவனத்தின் கதவுகள் பூட்டப்பட்டுச் சீல் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல மாதங்களாக கட்டிடத்திற்கான வாடகை மற்றும் பராமரிப்புக் கட்டணங்களை இந்நிறுவனம் செலுத்தாததால், கட்டிட உரிமையாளர் அலுவலகத்தைப் பூட்டி நோட்டீஸ் ஒட்டியுள்ளார். அதன் பின்னரே மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Advertisement