இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசிய விவகாரம்: ராகுல் காந்தியை கடுமையாக சாடினார் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா
திமுக எம்.பி தயாநிதி மாறனின் சர்ச்சைக்குரிய 'இந்தி பேசுபவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்கிறார்கள்' என்ற கருத்துக்கு தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகளான பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா பதிலளித்துள்ளார். மேலும், அவர் இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி பேசியுள்ளார். சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களுக்கும், இந்திக்காரர்கள் குறித்த தயாநிதி மாறன் கூறிய கருத்துக்களுக்கும் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறார் என்று பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் INDIA என்று பெயரிடப்பட்ட கூட்டணியில் உள்ளன. எனவே, திமுக தலைவர்கள் கூறிய கருத்துக்களை காங்கிரஸ் விமர்சிக்காமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திக்காரர்கள் குறித்து தயாநிதி மாறன் கூறிய கருத்துக்கள்
சமீபத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன், இந்திக்காரர்கள் குறித்து பேசிய ஒரு பழைய வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் ஆங்கிலம் கற்றவர்களையும், இந்தியை மட்டும் கற்றவர்களையும் ஒப்பிட்டு பேசிய தயாநிதி மாறன், ஆங்கிலம் கற்றவர்கள் ஐடி நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் என்றும், இந்தியை மட்டும் கற்றவர்கள் கட்டுமானப் பணி, சாலைகளை அமைக்கும் பணி அல்லது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளை செய்கிறார்கள் என்றும் கூறி இருந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, "நீங்கள் இந்துக்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கோ எதிரானவர் அல்ல என்பதை தேசத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும்." என்று ராகுல் காந்தியை சாடி பேசியுள்ளார்.