மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI
மணிப்பூர் பெண்களின் வீடியோ வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) இன்று(ஜூலை 29) முறைப்படி ஏற்றுக்கொண்டு, FIR பதிவு செய்துள்ளது. மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெரும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ இதற்கு எதிராக FIR பதிவு செய்துள்ளது. இதுவரை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீடியோ எடுக்கப்பட்ட மொபைல் போனும் மீட்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சகிப்புத்தண்மை இருக்கக்கூடாது
இனி, சிபிஐ குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து, குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) ஏற்கும் என்று உள்துறை அமைச்சகம், கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சகிப்புத்தண்மை இருக்கக்கூடாது என்றும், விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரி இருந்தது. மணிப்பூர் அரசின் ஆலோசனைக்குப் பிறகே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்தது என்பது உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.