ராகுல் காந்திக்கு ரேபரேலி தொகுதி: பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட முடிவு
இரண்டு முக்கிய அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் நின்று, இரண்டிலுமே வெற்றி பெற்ற ராகுல் காந்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஏதாவது ஒரு தொகுதியின் எம்பியாக மட்டுமே ஒருவரால் இருக்க முடியும் என்பதால் அவர் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என்று காங்கிரஸ் கட்சி இன்று தெரிவித்துள்ளது. ஆனால், வயநாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த எம்பியான ராகுல் காந்தி ராஜினாமா செய்வதால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அப்படி இடைத்தேர்தல் நடத்தப்படும் போது, வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முதன்முறையாக தேர்தலில் போட்டியிட இருக்கும் பிரியங்கா காந்தி
புது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசனை நடத்திய பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 4 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. விதிகளின்படி,தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் ராகுல் காந்தி ஒரு இடத்தை காலி செய்திருக்க வேண்டும். எனவே, தற்போது ராகுல் காந்தி ரேபரேலியை தேர்ந்தெடுத்திருப்பதால், அவரது சகோதரி பிரியங்கா காந்தி காலியாக உள்ள வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி இதுவரை தேர்தலில் நின்றதில்லை என்பதால், வாயநாட்டில் இருந்து அவர் போட்டியிட்டால், அதுவே அவரது முதல் தேர்தலாக இருக்கும்.