Loading...
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணம் திருப்பித் தர முடிவு எனத் தகவல்

தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பித் தர முடிவு? அரசு எச்சரிக்கையால் பலன்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
10:43 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை மாணவர்களிடமே திருப்பி அளிக்கப் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விதிகளை மீறிய கல்வி நிறுவனங்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு திட்டமிட்டதைத் தொடர்ந்து, நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் பொருட்டுச் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

விதிமீறல்

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் மீறல்

தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் படிப்பிற்குரிய கட்டணத்தை 4.5 ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், பயிற்சி காலத்திற்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் தெளிவாக அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும், பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்த விதியை மீறி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்கும் தொடர் புகார்கள் வந்தன.

தீவிர ஆய்வு

அரசு அமைத்த எல்லைக் குழுவும் தீவிர ஆய்வும்

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, அதிகக் கட்டணம் வசூலித்த கல்லூரிகளைக் கண்டறிந்து ஆய்வு செய்யத் தமிழக அரசு சார்பில் தனிக் குழு அமைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக, சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டண தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகத் திருப்பித் தரப் பல்வேறு கல்லூரிகள் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன.

ADVERTISEMENT

வங்கிக் கணக்கு

மாணவர்களின் வங்கி கணக்குகளைச் சேகரிக்கும் கல்லூரிகள்

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், "கூடுதல் கட்டணம் வசூலித்த கல்லூரிகள், அப்பணத்தைத் திருப்பி செலுத்துவதற்காக மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களைப் பெறத் தொடங்கியுள்ளன.

பணத்தைத் திரும்பத் தரும் கல்லூரிகள் மீது எடுக்கப்படவிருந்த கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் தவிர்க்கப்படலாம்.

இருப்பினும், தொடர்ந்து அரசு விதிகளை மீறி இயங்கும் கல்லூரிகளைக் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடரும்." எனத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT