தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: தமிழக அரசு உறுதியளித்ததை தொடர்ந்து சம்மேளனம் முடிவு
செய்தி முன்னோட்டம்
கட்டண உயர்வை வலியுறுத்தி செப்டம்பர் 30-ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடத்தப்படவிருந்த ஒரு நாள் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டம், தமிழக அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அளித்த உறுதியைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாதது மற்றும் மகளிருக்கான இலவசப் பேருந்து பயண அறிவிப்பு போன்ற காரணங்களால், தனியார் பேருந்துத் தொழில் கடுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேருந்துக் கட்டணத்தை உடனடியாக உயர்த்த வலியுறுத்தி, செப்டம்பர் 30 அன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.தங்கராஜ் அறிவித்திருந்தார்.
ஒத்திவைப்பு
அரசின் பேச்சுவார்த்தையும் வேலைநிறுத்த ஒத்திவைப்பும்
இந்நிலையில், தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் சங்க நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேருந்து உரிமையாளர்களின் முக்கியக் கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 29 அன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "தமிழக அரசின் நேர்மறையான உறுதியை ஏற்றி நாளை நடைபெறவிருந்த ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைக்கிறோம்" எனத் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதனால் நாளை பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்பதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.