மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து கைதான குற்றவாளிகள் பலர் சிறையில் தங்கள் தண்டனை காலத்தினை அனுபவிக்கிறார்கள்.
இவர்கள் சிறையினைவிட்டு வெளியில் வரும்பொழுது நல்ல மனிதர்களாக மனம் திருந்தி வரவேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதில் ஒன்று, சிறையிலுள்ள கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்வதாகும்.
சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களில் நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு அறுவடைச்செய்து, அதனை சிறையிலுள்ள செக்கில் எண்ணெய்யாக தயாரிப்பது போன்ற பல பணிகளை கைதிகள் செய்துவருகிறார்கள்.
இவ்வாறு கைதிகள் உற்பத்திச்செய்யும் பொருட்கள் வெளியில் கொண்டுவரப்பட்டு விற்பனையும் செய்யப்படுகிறது.
அதன்படி, சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி மேற்பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனைச்செய்ய சூப்பர் மார்க்கெட்கள் புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
கைதிகள்
சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பத்தார் கையில் கொடுக்கப்படும் சம்பள பணம்
அந்த வகையில், எழும்பூர் பகுதியிலுள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் துவங்கியுள்ள சூப்பர் மார்க்கெட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதுப்போன்று மதுரையில் துவங்கப்பட்டுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தினமும் கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்திற்கு பொருட்கள் விற்பனையாகிறது என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் பொருட்களை தயார் செய்யும் சிறைக்கைதிகளும் மாதம் ரூ.10ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்.
சிறையிலுள்ள கைதிகளுக்கு சாப்பாடு செலவுக்கூட இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு இந்த வருமானம் அப்படியே மிச்சமாகிறது.
மேலும் இந்த பணம் நேரடியாக கைதிகள் கையில் கொடுக்கப்படாது.
இதற்கென சிறையில் ஒரு கணக்கர் பணியாற்றி வருகிறார்.
அவர் இந்த சம்பள பணத்தினை பத்திரப்படுத்தி கைதிகளின் குடும்பத்தினர் வரும் பொழுது அவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.