LOADING...
பெண் சக்தியே வளர்ந்த இந்தியாவின் அச்சாணி; குடியரசு தின உரையில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர்
குடியரசு தின உரையில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

பெண் சக்தியே வளர்ந்த இந்தியாவின் அச்சாணி; குடியரசு தின உரையில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 25, 2026
07:41 pm

செய்தி முன்னோட்டம்

நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய குடியரசுக்கான ஒரு மிகச்சிறந்த அடித்தள ஆவணம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நமது நாட்டின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை ஒருமுறை திரும்பிப் பார்க்க குடியரசு தினம் ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

ஒற்றுமை

தேசியவாத உணர்விற்கு அடித்தளம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ளன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசியவாத உணர்விற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். 1950 ஆம் ஆண்டு முதல், நாம் நமது அரசியலமைப்பு லட்சியங்களை நோக்கி இந்தியக் குடியரசை வழிநடத்தி வருகிறோம்." என்று கூறினார்.

பெண்கள்

பெண் சக்தி குறித்த பெருமிதம்

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். அவர் தனது பேச்சில் பெண்கள் தற்போது பாரம்பரியக் கட்டுப்பாடுகளை உடைத்து எறிந்துவிட்டு, விவசாயம் முதல் விண்வெளி வரை, சுயதொழில் முதல் ஆயுதப்படை வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து வருவதை குறிப்பிட்டு பாராட்டினார். மேலும், கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியப் பெண்கள் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்றதையும், செஸ் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இரு இந்தியப் பெண்கள் மோதியதையும் அவர் பாராட்டிப் பேசினார்.

Advertisement

குடியரசு

உள்ளடக்கிய குடியரசு

பாலின சமத்துவத்தின் அடிப்படையில் ஓர் உள்ளடக்கிய குடியரசை உருவாக்குவதில் பெண்களின் அதிகரித்து வரும் பங்களிப்பு உலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். ஜனவரி 26, 1950 முதல் நாம் நமது இலக்குகளை நோக்கிப் பயணிப்பதாகக் கூறிய அவர், நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தினார்.

Advertisement