6 புதிய ஆளுநர்களை நியமித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு; 3 ஆளுநர்கள் இடமாற்றம்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆறு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார் மற்றும் மூன்று பேரை இடம் மாற்றியுள்ளார் என்று ராஷ்டிரபதி பவனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த அலுவலகங்களை ஏற்றுக்கொண்டவுடன் இடமாற்றங்கள் நடைமுறைக்கு வரும். புதிய நியமனங்கள் பின்வருமாறு: அனுசுயா உய்கேக்குப் பதிலாக, லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாமின் ஆளுநராகவும், கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் ஆளுநராகவும் பணியாற்றுவார். பன்வாரிலால் புரோஹித்துக்குப் பதிலாக, அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா பஞ்சாப் ஆளுநராக பதவியேற்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளார். மகாராஷ்டிராவில் ரமேஷ் பாயிஸுக்கு பதிலாக சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார்.
புதிய ஆளுநர்கள் நியமன விவரங்கள்
ராதாகிருஷ்ணன் இதற்கு முன்பு ஜார்க்கண்ட் ஆளுநராகவும், தெலுங்கானா மாநிலத்தின் கூடுதல் பொறுப்பாளராகவும் இருந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக முன்னாள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக திரிபுராவின் முன்னாள் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மாவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே கைலாசநாதனும் பதவியேற்க உள்ளனர். அசாமைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினரான ராமன் டேகா சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில், கல்ராஜ் மிஸ்ராவுக்குப் பதிலாக, ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மைசூரைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினரான சி.எச்.விஜயசங்கர் மேகாலயா ஆளுநராக பணியாற்ற உள்ளார்.