ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
சென்னை கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்தநாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத்துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க மருத்துவமனை தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. தற்போது இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது.
குடியரசு தலைவரை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விமானம் இன்று(ஏப்ரல்.,28) டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை திமுக எம்.பி.டி.ஆர்.பாலு மற்றும் திமுகவின் பிற முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் முதல்வருக்கு அளிக்கப்பட்டது. அதனையடுத்து இன்று காலை 11 மணியளவில் ஸ்டாலின் அவர்கள் இந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவர்களை டெல்லி ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். அப்போது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டினையொட்டி சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமணியினை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழினை கொடுத்தார். முதல்வர் ஸ்டாலினின் அழைப்பினை ஏற்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5ம் தேதி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.