பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 11 குழந்தைகளுக்கு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருது
ஒவ்வொரு ஆண்டும் தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5ல் இருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, இந்தாண்டு கலை கலாச்சார பிரிவில் 4 பேருக்கும், துணிச்சல், சமூக சேவை பிரிவில் தலா 1வருக்கும், புத்தாக்கம் பிரிவில் 2 பேருக்கும், விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும் என இந்தியா முழுவதும் உள்ள 11 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று(ஜன.,23) நடந்தது.
'நாட்டின் நலனுக்காக குழந்தைகள் சிந்திக்க வேண்டும்' - இந்திய ஜனாதிபதி
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்ட்ரீய பால் புரஸ்கர் விருதுகளை வழங்கினார். அப்போது பேசிய திரவுபதி முர்மு அவர்கள், குழந்தைகள் தான் இந்நாட்டின் மிக பெரிய சொத்து என்றும், நாட்டின் நலன் குறித்து குழந்தைகள் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் நாடு மற்றும் சமூக நலனுக்காகவும், அவர்களது எதிர்கால நலனுக்காகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, இந்த விருதுகளை பெற்ற குழந்தைகள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்வார்கள் என்றும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று கலந்துரையாடுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.