கேப்டன் விஜயகாந்த் சார்பாக பத்மபூஷன் விருதை பெற்று சென்னை திரும்பினார் பிரேமலதா விஜயகாந்த்
பத்மபூஷன் விருதை டெல்லியில் பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், "ஒட்டுமொத்த கேப்டன் ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்துக்கு அண்மையில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை மாலை டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பத்மபூஷன் விருதை பெற்றுக் கொண்டார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமை தாங்கி, விருதுகளை வழங்கினார். விஜயகாந்த் சார்பாக இந்த விழாவில், பிரேமலதா, அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் மச்சினர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.