Loading...
மக்களே உஷார்; தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

மக்களே உஷார்; தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 07, 2026
02:24 pm

செய்தி முன்னோட்டம்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் இந்த சூழலில், கடலோரப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைப் பொழிவு மேலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தென் தமிழகத்தின் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையின் பல நகர்ப்புற பகுதிகளிலும் காலை முதலே சாரல் மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடல்

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கம்

இதன் தொடர்ச்சியாக வருகிற நவம்பர் 13-ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் மழையின் அளவு கணிசமாக அதிகரிக்கும்.

புதிய தாழ்வுப் பகுதி வலுவடையும் பட்சத்தில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் மேலும் தீவிரமடைந்து பரவலான மாபெரும் மழைப் பொழிவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

மீனவர்கள்

பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கான முக்கிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள்

மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் திறந்தவெளிகளிலும் மரங்களின் அடியிலும் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இடி மின்னல் ஏற்படும் போது மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு மற்றும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடலில் உள்ளவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT